சிறுநீரகக் கல்லுக்கு சிகிச்சை பெறுவதற்காக நடிகை வித்யா பாலன் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்திப்பட உலகின் முன்னணி நடிகை வித்யா பாலன். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற படத்தின் மூலம் பெரும் புகழ்பெற்ற இவர், தொடர்ந்து குணச்சித்திர நடிகையாகவும், மாடலிங் துறையிலும் முன்னணியில் இருந்து வருகிறார்.
37 வயதாகும் வித்யா பாலனுக்கு நாளை 2016 புத்தாண்டுடன் 38–வது வயது பிறக்கிறது. பிறந்த நாள் விழாவை அவர் கணவருடன் நியூயார்க் நகரில் கொண்டாட திட்டமிட்டிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் (டிசம்பர்-29) அபுதாபிக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து நியூயார்க் விமானத்தை பிடிக்க இருவரும் திட்டமிட்டிருந்தனர். இதற்காக வித்யா பாலன் கணவருடன் மும்பை விமான நிலையம் சென்று அபுதாபி விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானம் புறப்பட தயாராக இருந்த போது திடீர் என்று வித்யாபாலனுக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது.
உடனே சித்தார்த் ராய் கபூர், வித்யாபாலனுடன் விமானத்தில் இருந்து இறங்கி நேராக காரில் மும்பை இந்துஜா மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் வித்யாபாலனுக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல் உருவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிறுநீரக கல்லை கரைப்பது தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வித்யாபாலனின் வெளிநாட்டுப் பயணமும் பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டமும் ரத்து செய்யப்பட்டது.
கைதேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் விரைவில் அவர் குணமடைவார் என்றும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
வித்யா பாலன்
,
வித்யா பாலன் மருத்துவமனையில்