“தமிழ்சினிமாவில் எனக்குதான் அதிக சம்பளம்” என்கிற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் எல்லா ஹீரோக்களும். இப்படி சம்பளத்தில் போட்டி போடும் நடிகர்களோ, நடிகைகளோ… மக்களுக்கு ஒரு சங்கடம் என்றால், நான் நீ என்று போட்டி போடுகிற நிலைமை சத்தியமாக தமிழகத்தில் வரப்போவதில்லை. (அதற்கும் உதாரணமாக திகழ்வது அண்டை மாநில சினிமாக்கார்கள்தான்)
தன் படங்கள் வரும்போதெல்லாம் கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்றிய ரசிகனின் ஊர், ரசிகனின் வீடு, ரசிகனின் உடமை, ரசிகனின் சட்டை, ஜட்டி, ரசிகனின் கோமணம் எல்லாமே இன்று வெள்ளத்தில் போய் விட்டது. இன்னும் மவுனம் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். “என் ஹீரோவின் கையை கட்டிப் போட்டது எவண்டா…?” என்று குரல் கொடுக்கக் கூட தெம்பில்லாமல் குளிரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறான் அந்த ரசிகன். ஐயோ பாவம். அறியாத ரசிகன்.
வெள்ளம் தானாக வடிந்து, வெறும் வயிறு அதுவாக காய்ந்து, உச்சந்தலை அதுவாக சூடாகி, அடிக்குடல் அதுவாக மரத்து, எல்லாம் பழகிய பின் தன் கட் அவுட் தலைவன் கசங்கி புழுங்கி ஒரு காசாலையை நீட்டுவான். அதை போட்டோ எடுத்து பிரமாதப்படுத்தும் ஊடகங்கள். அண்டை மாநிலத்துக்கு காட்டுகிற அவசரத்தை கூட சொந்த மாநிலத்தில் காட்டாத இந்த தர்ம பிரபுக்கள்தான், நாளைய தமிழனின் நம்பிக்கை டார்ச் லைட்!
மழை புயல் என்றதும் மறுநாளே ஓடி வந்து 3000 போர்வைகளை கடலூர் மற்றும் சென்னைக்கு சரிபாதியாக பிரித்துக் கொடுத்த சிவகார்த்தியேனின் அவசரம் கூட இவர்களுக்கு வரவில்லையே? சுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்கு சமையல் ஒப்பந்தக்காரர்களுக்கு ஆர்டர் கொடுத்து ஆதரவற்றோர்க்கு உணவளித்திருக்கிறார்கள் அதே சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றத்தினர். இவை எதையும் அவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்ளவேயில்லை என்பதுதான் முக்கியமான விஷயம்.
நடிகர் சங்கத்தின் உதவியுடன் சின்னஞ்சிறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ஐயோ பாவம்… சங்கத்தேர்தலுக்கு அவர்கள் செய்த செலவில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை இது.
“செய்யுற உதவியை விளம்பரம் இல்லாம செய்யணும்” என்று அதற்கான வழிகளை இன்னும் யோசித்துக்கொண்டேயிருக்கிறாராம் ரஜினி. (நல்ல ஐடியா! தலைவா… எவ்ளோ கொடுத்தேன்னு எவனும் கேட்க முடியாதே? ஆனா ஒண்ணு. கடலூரிலும், சென்னையிலும் வெள்ள நீர் வடியறதுக்குள்ள யோசிச்சிடுங்க தலைவா) தமிழ்சினிமாவில் அதிக சம்பளம் வாங்குகிற ஒரே ஹீரோ இவர்தான். இதுபோன்ற நிவாரண உதவிகளுக்கு அதிக தொகை கொடுப்பவரும் இவர்தான் என்று சொல்லும்படி ஒருபோதும் கொடுத்ததில்லை அந்த கைகள். நேற்று வந்த ஆஃப் பாயில் மார்க்கெட் ஹீரோக்களின் உதவித்தொகைக்கு நிகராகதான் இருக்கிறது அது. இந்த ஒப்பீடுகள் இருக்கக் கூடாது என்பதற்காகதான் தலைவர் ‘விளம்பரம் இல்லாம’ என்றொரு வரியை உள்ளே செருகியிருக்கிறார் போலும்.
ரஜினியாவது பரவாயில்லை. சீனில் யார் மூலமாகவோ தலையை காட்டிவிட்டார். உலக நாயகனுக்கு இன்னும் வெள்ளத் தகவல் போய் சேரவேயில்லை போலிருக்கிறது. அஜீத்தின் ஈகை குணம் தமிழ்சினிமா இன்டஸ்ட்ரி அறிந்ததுதான். இந்த நிமிடம் வரைக்கும் அவருக்கு என்ன ஆயிற்றோ? அவருக்குள்ளிருக்கும் கர்ணனுக்கும் சேர்த்து கால் ஆபரேஷன் பண்ணிவிட்டானோ இறைவன்?
விஜய், ஆதரவு கரம் நீட்டுகிற விஷயத்தில் ஆயிரம் உள் குத்துகள் உண்டு. ரசிகர் மன்றமே பணத்தை திரட்டி, அதை விஜய் கையால் கொடுக்க வைப்பார்கள். இந்த முறை வசூலிக்கிற ரசிகனே, வாய்க்கால் எது, வாசல்படி எது என்று தெரியாமல் தத்தளிக்கிறான். இவர் என்ன செய்வார், பாவம்?
ஆந்திராவில் புயல் வந்தபோது நம்ம ஊர் நடிகர் நடிகைகள் கொடுத்த உதவித்தொகை லிஸ்ட்தான் இது.
ரஜினி – ரூ.5 லட்சம், விஜய் – ரூ.5 லட்சம், விஷால் – ரூ. 15 லட்சம், சூர்யா – ரூ. 25 லட்சம், கார்த்தி – ரூ. 12.5 லட்சம், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் – ரூ.12.5 லட்சம், சமந்தா – ரூ.10 லட்சம், காஜல் அகர்வால் – ரூ.5 லட்சம்.
தமிழ்நாட்டில் வெள்ளம் வந்து முழுசா ஒருவாரம் ஆகிறது. இன்னும் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லையே இவர்கள்? அப்படியென்றால் நன்கொடைக்குப்பின் இருப்பது மனிதாபிமானம் இல்லையா?
கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் விருப்பம். இந்த கேள்வியை ஏன் நடிகர் நடிகைகளிடம் மட்டும் கேட்க வேண்டும்? ஐசிஐசி பேங்க் மாதிரி தமிழ்நாட்டில் பேங்க் நடத்தும் தனியார்களிடம் கேட்டிருக்கலாமே? பஸ் முதலாளிகளிடம் கேட்டிருக்கலாமே? பெட்ரோல் பங்க் ஓனர்களிடம் கேட்டிருக்கலாமே? வியாபாரிகள் சங்கத்திடம் கேட்டிருக்கலாமே? இப்படியெல்லாம் கூட கேள்விகள் வரும். அதில் ஓரளவு நியாயமும் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் அப்படி கேட்பது யாரென்று நினைக்கிறீர்கள்? கட் அவுட்டுக்கு பால் ஊற்றுகிற அதே பக்தன்தான்!
இந்த டெம்போ இருக்கிற வரைக்கும் உங்களை யாரும் அசைச்சுக்க முடியாது! உங்க மவுனப் புரட்சியை நடத்துங்க ராசாக்களா!
Tags:
Cinema
,
அஜீத்
,
கமல்
,
சினிமா
,
ரஜினி
,
விஜய்