தமிழகத்தில் பெய்து வரும் கனமழை மக்களின் அன்றாட வாழ்க்கையை ரொம்பவும் பாதித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலரும் உண்ண உணவு, தங்க இருப்பிடம் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வந்துள்ளனர்.
அதன்படி, முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக சமீபத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் ஆகியோர் நிதி உதவி செய்துள்ளனர். மேலும், ராகவா லாரன்ஸ், விஷால் ஆகியோர் தனிப்பட்ட முறையில் பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து நடிகை சோனா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ‘ரைஸ் பவுல் சேலஞ்ச்’ என்ற புதிய அமைப்பை தொடங்கி, அதன்மூலம் உதவ முன்வந்துள்ளார்.
இந்த அமைப்பின் மூலம் கடந்த சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை பொதுமக்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன்படி சிலர் பொருட்களாகவும், பணமாகவும் இந்த அமைப்புக்கு உதவி செய்துள்ளனர். இதுவரை சுமார் 1500 கிலோ அரிசி மற்றும் 500 டூத் பிரஷ்கள் பெறப்பட்டுள்ளதாம். இதுதவிர பிஸ்கெட்டுகள், குளியல் சோப்புகள், டூத் பேஸ்ட், காபி பவுடர் போன்றவற்றையும் தந்து உதவுமாறு சமூக வலைத்தளங்களில் சோனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு பெறப்படும் அனைத்து பொருட்களையும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலிடம் கொடுத்து, அவரது மன்றங்கள் மூலமாக தமிழகம் முழுக்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் நிவாரண பொருட்கள் சென்றடைய வழிவகை செய்துள்ளார் சோனா.
Tags:
Cinema
,
சினிமா
,
சோனா
,
மழையால் சோனா எடுத்த முடிவு