சினிமா நடிகர்-நடிகைகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இயங்கி வருவதை போன்று தொலைக்காட்சி நடிகர்களுக்காக தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் 1,300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்பட மொத்தம் 23 பதவிகள் இருக்கின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்து முடிந்த தேர்தலில் தலைவராக நளினி, பொதுச்செயலாளராக பூவிலங்கு மோகன், பொருளாளராக வி.டி.தினகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களது பதவிக்காலம் 2017-ம் ஆண்டு வரை இருக்கிறது. இருப்பினும் சங்க நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து தலைவர் பதவியில் இருந்து நளினியும் விலகினார்.
சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்ட மனஸ்தாபம், திடீர் ராஜினாமா போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேற்று முன்தினம் (புதன்கிழமை) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ராஜினாமா செய்த நிர்வாகிகளின் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகள், சங்கத்தை பாதிக்காமல் இருக்க போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து இருமடங்காக முன்பணம் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நளினியை தொடர்புகொண்டு கேட்டதற்கு ‘‘சின்னத்திரை நடிகர் சங்கத்தை இளையதலைமுறையினர் தாங்கிப்பிடிக்கும் நேரம் வந்துவிட்டது.
குடும்பம், நடிப்பு போன்ற காரணங்களால் தலைவர் பதவியை தொடர முடியவில்லை. நானாகவே பதவியை ராஜினாமா செய்தேன். இதில் வற்புறுத்தலுக்கும், சூழ்நிலைக்கும் இடமில்லை’’ என்று கூறினார். வெள்ளித்திரை நடிகர்-நடிகைகளின் போட்டா போட்டி முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், சின்னத்திரை நடிகர்களின் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Cinema
,
சினிமா
,
டிசம்பர் 13 தேர்தல்
,
திடீர் ராஜினாமா
,
நடிகர்
,
நடிகைகள்