சென்னையில் வசிக்கும் என் சக மக்களின் நிலையைக் கண்டு என்னுடைய இதயத்தில் இருந்து ரத்தம் வழிகிறது என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் புறநகரில் வசிக்கும் மக்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது.
வீடு, வாசல்களில் வெள்ளம் புகுந்தது மட்டுமன்றி மின்சாரமும் தடைப்பட்ட நிலையில் சென்னை மக்கள் உயிரைத் தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு பரிதவித்து நிற்கின்றனர். மழை, வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சக மனிதர்களும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் “நான் ஹைதராபாத்தில் சிக்கிக் கொண்டேன்.
என் சக குடிமக்களின் நிலையைக் கண்டு எனது இதயத்தில் இருந்து ரத்தம் வழிகின்றது. ஆனாலும் இந்த மாதிரி சூழ்நிலையில் மனிதர்கள் தங்கள் சக மனிதர்களிடம் காட்டும் மனிதாபிமானத்தைக் கண்டு நான்
நெகிழ்ந்து போயிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். மேலும் திருவிக நகர், அம்பத்தூர், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட், ராயபுரம், அண்ணா நகர் மற்றும் மாதவரம் போன்ற இடங்களுக்கான உதவி
பெறும் தொலைபேசி எண்களையும் பதிவிட்டிருக்கிறார். நடிகர் விவேக்கின் இந்த பதிவிற்கு நிறைய பேர் நீங்கள் பத்திரமாக இருங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சினிமா
,
மக்களின் நிலையைக் கண்டு இதயத்தில் ரத்தம் வழிகின்றது
,
விவேக்