கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கப்போவது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது. சிரஞ்சீவியுடன் டூயட் பாட அனுஷ்காவிடமும், நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த கத்தி படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்க உள்ளார். ராம் சரண் தயாரிக்கும் இப்படத்தை தாகூர் படப் புகழ் வி.வி. வினாயக் இயக்குகிறார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி அரசியல்வாதியான பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை.
தனிக்கட்சி தொடங்கி பின்னர் காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைத்த அவர், ராஜ்யசபா உறுப்பினராகி மத்திய அமைச்சராக சில காலம் சைரன் காரில் வலம் வந்தார். மத்தியில் ஆட்சி மாறவே அமைச்சர் பதவியும் போனது.
அரசியலில் பெரியதாக இனி எதுவுமில்லை என்று எண்ணியோ என்னவோ மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தார். 150வது படத்தில் நடிக்கப் போவதாக சிரஞ்சீவி அறிவித்து ஒன்றரை வருடத்துக்கும் மேலாகி விட்டது.
புரி ஜெகனாத் இயக்கத்தில் நடிக்க நினைத்தவர் ஸ்கிரிப்ட் சரியில்லாததால் அந்த எண்ணத்தை கைவிட்டார். விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் உருவான கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க முடிவு செய்தார். இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த திட்டத்தையும்
தள்ளிப்போட்டார்.
அரசியல் பிரமுகரான சிரஞ்சீவி காதல் கதையிலோ, ஆக்ஷன் கதையிலோ நடித்தால் பொருத்தமாக இருக்காது, சமுதாயத்துக்கு கருத்து சொல்லும் விதமான கதையில் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று ஆலோசனை கூறினர்.
இதையடுத்து மீண்டும் ‘கத்தி’ ரீமேக்கில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கத்தி ரீமேக்கில் சிரஞ்சீவி நடிப்பதை அவரது மகனும், நடிகருமான ராம் சரண் உறுதி செய்திருக்கிறார். இப்படத்தை வி.வி.வினாயக் இயக்க உள்ளார். ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தை தெலுங்கில் இவர் தகுந்த மாற்றங்களுடன் இயக்கி ஹிட் படமாக அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தியில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். சமந்தாவிற்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனினும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் கசிந்துள்ளன.
சிரஞ்சீவியின் ஆட்டத்திற்கு உடன் ஆடப்போவது யாரோ யாருக்கு செல்ஃபி எடுக்க குடுத்து வைத்திருக்கிறதோ?
Tags:
Cinema
,
கத்தி
,
கத்தி ரீமேக்கில் அனுஷ்காவா??நயன்தாராவா??
,
சினிமா